இந்திய தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தியுள்ள - வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் அலுவலர்கள் பின்பற்ற வேண்டும் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தற்போதைய சூழலுக்கு ஏற்ப இந்திய தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வாக்குச்சாவடி அலுவலர்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற் கட்டதேர்தல் பயிற்சி வகுப்புகள் 4 இடங்களில் நடைபெற்றன.

திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் 2,964 தேர்தல் அலுவலர்களும், ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் 1,198 தேர்தல் அலுவலர்களும், வாணியம்பாடி இஸ்லாமிய ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வகுப்பில் 1,539 தேர்தல் அலுவலர்களும், நாட்றாம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் 1,029 தேர்தல் அலுவலர்கள் என மொத்தம் 6,730 பேர் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சி வகுப்புகளில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள்நேற்று திடீரென சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசும்போது, "தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் ஆணையம் புதிய நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளை வாக்காளர்களும், தேர்தல் அலுவலர்களும் கட்டாயமாக பின்பற்றுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வாக்குப்பதிவு சிறப்பாகவும், எளிமையாகவும் நடைபெற தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றிட வேண்டும்’’ என்றார்.

அப்போது, திருப்பத்தூர் சார் ஆட்சியர் வந்தனாகர்க், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி, ஜோலார்பேட்டை தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமி, ஆம்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, துணை ஆட்சியர்கள் பூங்கொடி, விஜயன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அனந்தகிருஷ்ணன் (ஆம்பூர்), மோகன் (வாணியம் பாடி), சுமதி (ஜோலார்பேட்டை), சிவப்பிரகாசம் (திருப்பத்தூர்), மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை உட்பட பலர் உடனிருந்தனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வாக்குப்பதிவு சிறப்பாகவும், எளிமையாகவும் நடைபெற தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றிட வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்