1,371 வாக்குச்சாவடிகளில் சேகரிக்கப்படும் - கரோனா மருத்துவ கழிவுகளை அகற்ற 10 இடங்கள் தேர்வு : திருப்பத்தூர் ஆட்சியர் சிவன் அருள் தகவல்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 1,371 வாக்குச்சாவடிகளில் சேரும் கரோனா மருத்துவக் கழிவுகளை அகற்றிட மாவட்டம் முழுவதும் 10 இடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரியில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இதனை, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தொடங்கி வைத்துப் பேசும்போது, ‘‘இதுவரை நடைபெற்ற தேர்தலில் இருந்து தற்போது நடைபெறும் தேர்தல் வித்தியாசமானது.

இந்த தேர்தலில் கரோனா தடுப்பு விதிமுறைகளை அரசு அலுவலர்களும் வாக்காளர்களும் வாக்குச்சாவடி மையங்களில் கரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கரோனா தடுப்புப் பணிக்காக வழங்கப்படும் பொருட்களை வாக்குச் சாவடிகளுக்கு விடுபடாமல் கொண்டு செல்ல வேண்டும்.

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் பயன்படுத்தும் பொருட்களை ஆங்காங்கே வீசாமல் அங்குள்ள குப்பைத் தொட்டியில் போட நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா மருத்துவக் கழிவுகளை தனியார் நிறுவனம் மூலம் அப்புறப்படுத்தப்படும். இந்தக் கழிவுகளை அகற்றிட மாவட்டம் முழுவதும் 10 இடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், கரோனா நோயாளிகள் விரும்பினால் தபால் வாக்குகளை தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் 1,371 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மாவட்டத்தில் 143 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பயிற்சியின்போது ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்துகொள்ள வேண் டும்’’ என்றார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன் ராஜசேகர், தேர்தல் நடத்தும் அலுவலர் காயத்ரி சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்