பொது சுகாதாரத் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி17 நபர்களிடம் சுமார் ரூ. 84 லட்சம்வரை ஏமாற்றிய இருவரை திருப்பூர்போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர்- காங்கயம் சாலை விஜிபி கார்டன் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (38). பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் சதீஷ். சேலத்தை சேர்ந்தவர். இவர், கீதா, ஜெயலட்சுமி மற்றும் பிரேம்குமார் ஆகியோரை மணிகண்டனுக்கு அறிமுகம் செய்துள்ளார். தனது மாமனார் சென்னை தலை மையகத்தில் பணியாற்றுவதாக சதீஷூம், அவரது நண்பர்களும் தெரிவித்துள்ளனர். மேலும் சுகாதாரத் துறையில் ஏராளமான காலிப் பணியிடங்கள் உள்ளதா கவும், நபர் ஒன்றுக்கு ரூ.5,50,000 கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளனர்.
இதனை நம்பி, மணிகண்டன் மற்றும் பலர் ரூ.41,20,000-ஐ சதீஷின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி உள்ளனர்.
இதுமட்டுமின்றி ரொக்கமாக ரூ.43,72,000 கொடுத்துள்ளனர். 17 நபர்களிடம் இருந்து ரூ.84,92,000 பெற்றுள்ளனர். பல நாட்களாகியும் வேலை வாங்கித் தராமலும், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமலும் இருந்துள்ளனர்.
ஏமாற்றமடைந்த மணிகண்டன், திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் கார்த்திகேயனிடம் புகார் அளித்தார். இதையடுத்து, சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த சதீஷ் (38) மற்றும் அவரது நண்பர் பிரேம்குமார் (35) ஆகியோரை, திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார், நேற்று முன்தினம் மாலை சேலத்தில் கைது செய்தனர். திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்பு, கோவை மத்திய சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago