தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத் (சைமா) தலைவர் ஏ.சி. ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தொழில் நிறுவனங்களும், அனைத்து தொழிற்சங்கங் களும், வணிகர்களும் இணைந்து நூல் விலை உயர்வைக் கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், வரும் 15-ம் தேதி பனியன் உற்பத்தி நிறுத்தம் மற்றும் கடையடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தொழில் துறையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நூல் மற்றும் துணி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும். பருத்தி மற்றும் நூலை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். பருத்தி பதுக்கலை தடுக்க வேண்டும். தடையில்லாமல் நூல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாயம், லைக்ரா, ரப்பர், காகிதம், பாலித்தீன் போன்ற மூலப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
தொழில் பாதுகாப்புக் குழுவின் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் அண்ணாத்துரை தலைமையில் நடந்தது. இதில் நூல் விலை உயர்வை கண்டித்து நடைபெறும் உற்பத்தி நிறுத்தம், கடையடைப்புப் போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. நூல் விலை சீராக இருக்க பின்னலாடைத் துறை மற்றும் நூற்பாலைத் துறைகளை இணைத்து ஒரு கூட்டுக்கமிட்டி அமைக்க வேண்டும்.
தொழில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுடன் போராட்ட நாளன்று காலை 9 மணிக்கு, திருப்பூர் குமரன் சிலையில் இருந்து மாநகராட்சி அலுவலகம் வரை நடைபெறும் அமைதிப் பேரணியில் கலந்துகொள்வது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago