காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் - ஒருவர் மட்டும் வேட்புமனு தாக்கல் :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 11 தொகுதிகளில் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பல்லாவரம் தொகுதியில் மட்டும் ஒருவர் மனுதாக்கல் செய்துள்ளார். மற்ற தொகுதிகளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், பெரும்புதூர், ஆலந்தூர் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் சிலர் மனுக்களை மட்டும் வாங்கிச் சென்றுள்ளனர். வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் ஆகிய 7 தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் பல்லாவரம் தொகுதியில் மட்டும் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் ஒருவர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மற்ற தொகுதிகளில் யாரும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யவில்லை. வேட்புமனுக்களை பலர் வாங்கிச் சென்றுள்ளனர்.

முதல் நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் ஆர்வம் காட்டாததால் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலர் அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டத்தில்..

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில், வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக வட்டாட்சியர் அலுவலகங்கள், பெரு நகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்கள் தயார் நிலையில் இருந்தன.

இந்நிலையில் முதல் நாளான நேற்று ஆவடி, திருவொற்றியூர் சட்டப்பேரவை தொகுதிகளில் தலா ஒருவர், அம்பத்தூர் தொகுதியில் இருவர் என, 4 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்