தனியார் மயமாக்குதலை கண்டித்து - வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

வங்கித்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து திருப்பத்தூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் முன்பாக வங்கிஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடனர்.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குதல், வங்கித்துறை சீர்த்திருத்தம், பொது இன்சூரன்ஸ் தனியார் மயமாக்குதல் உள்ளிட்டவைகளை கண்டித்து மார்ச் 15-ம் தேதி மற்றும் 16-ம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தப்போராட்டத்தில் வங்கித்துறை ஊழியர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் அகில இந்திய கூட்டமைப்பு சார்பில் திருப்பத்தூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கி முன்பாக நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பாரத ஸ்டேட் வங்கியின் மாவட்ட விற்பனை மையத்தின் துணை மேலாளர் பாலமுருகன் வரவேற்றார்.

காந்திபேட்டை இந்தியன் வங்கியின் துணை மேலாளர் கணேஷ் முன்னிலை வகித்தார். பாரத ஸ்டேட் வங்கியின் கடன் வழங்கும் மையத்தின் மேலாளர் ராஜதுரை தலைமை வகித்துப் பேசும்போது, "பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்க வேண்டிய மத்திய அரசு 2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க திட்டமிட்டுள்ளது. கார்ப்பரேட் கம்பெனிகள் பெற்ற வாராக் கடன்களை வசூலிக்க வங்கிகள் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் இந்த முயற்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல, பொது இன்சூரன்ஸ் தனியார் மயமாக்கு தல், எல்ஐசி பங்குகள் விற்பனை என்ற மக்களை திசை திரும்பும் அறிவிப்பை மத்திய பட்ஜெட்டில் வெளியிட்டதை அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் மத்தியதொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கண்டிக்கிறது. மேலும், பொதுமக்களை பாதிக்கும் வகையில் வங்கி சீர்த்திருத்தங்களை கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சியை திரும்பப் பெறவலியுறுத்தி மார்ச் 15 மற்றும் 16-ம் தேதிகளில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்