செங்கல்பட்டு அருகே இந்தியன் வங்கி மேலாளரை கண்டித்து 100-க்கும் மேற்பட்டோர் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்த களத்தூர் பகுதியில் இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர்.
இப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அவர்கள் அனைவரும் இந்த வங்கிக் கிளையில் பயிர் கடன், நகை கடன் உள்ளிட்டவற்றை பெற்று, திரும்ப செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று 100-க்கும் மேற்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி முன்பு திரண்டு, “வங்கி கிளையின் மேலாளர் மலர்மதி வாடிக்கையாளர்களிடம் முறையாக நடந்து கொள்ளவில்லை. வங்கி கணக்குப் புத்தகங்களில் வங்கிப் பரிவர்த்தனைகளை பதிவு செய்து தருவதில்லை. வங்கி கணக்கில் உள்ளதங்களது சேமிப்பு பணம் திடீரென குறைகிறது; அதுபற்றி கேட்டால் சரியான பதில் அளிப்பதில்லை” என்று புகார் தெரிவித்து, வங்கிமேலாளரை கண்டித்து சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீஸார் வங்கி வாடிக்கையாளர்களிடம் பேசினர். வங்கி கணக்கு புத்தகத்தில் வரவு செலவு கணக்கை பதிவுசெய்ய ஏற்பாடு செய்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago