செங்கல்பட்டு எஸ்பியாக இருந்ததெ.கண்ணன் நேற்று முன்தினம் தேர்தல் ஆணையத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நேற்று புதியகண்காணிப்பாளராக இ.சுந்தரவதனம் பதவி ஏற்றுக்கொண்டார்.
தமிழக காவல் துறையில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த அதிகாரி, அண்மையில் முதல்வர் டெல்டா மாவட்ட சுற்றுப்பயணம் சென்றபோது, முதல்வரை வரவேற்க வந்த மாவட்ட பெண்ஐபிஎஸ் அதிகாரியிடம் அத்துமீறியதாக சர்ச்சை எழுந்தது.
சென்னையில் டிஜிபியிடம் புகார் அளிப்பதற்காகத் தனதுகாரில் சென்றபோது, செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் வழிமறித்து, டிஜிபியிடம் புகார் செய்யவேண்டாம்; இதனால் தேவையில்லாத பிரச்சினை ஏற்படும் என்று மிரட்டல் விடுத்ததாக சர்ச்சை கிளம்பியது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப் பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை வணிக குற்றப்பிரிவு எஸ்பியாக கண்ணன் இடமாற்றம் செய்யப்பட்டார். இதனிடையே கண்ணனை சஸ்பெண்ட் செய்ய தேர்தல் ஆணையம் தமிழக தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதேபோல் பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட கண்ணனுக்கு உதவியாக இருந்த செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ், உதவி ஆய்வாளர் மணிகண்டன், அதிவிரைவுப் படைகாவலர்கள் உட்பட மொத்தம் 19 பேரை காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்து,காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி உத்தரவிட்டார்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இ.சுந்தரவதனம் நேற்று நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று பிற்பகல் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சக காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago