அதிமுக வேட்பாளர் பட்டியலை மறுபரிசீலனை செய்ய வேண்டும் : சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் பேட்டி

By செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சாத்தூர் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி அவர் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:

சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மக்களுடன் மக்களாக நான் பணியாற்றினேன் என்பது அனைத்துக் கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கைக்கூலிகள் சிலர் இந்தத் தேர்தலில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதை முதல்வரும் துணை முதல்வரும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. அதற்கான அனைத்து ஆதாரங்களையும் நான் வைத்துள்ளேன்.

17 ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்களுடன் முதல்வர், துணை முதல்வரை சந்தித்து விருதுநகர் மாவட்டத்தில் கட்சி நிலவரம் குறித்து ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கும் இதுபற்றி தெரிவித்துள்ளேன். சிவகாசியில் இருந்து ராஜபாளையம் சட்டபேரவைத்தொகுதிக்கு மாறி இந்தமுறை போட்டியிடும் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்