திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை முதல் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வேட்பு மனு தாக்கல் நாளை (12-ம் தேதி) தொடங்குகிறது. வேட்புமனு பரிசீலினை ஏப்ரல் 20-ம் தேதியும், 22-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படுகிறது.
சனி, ஞாயிறு (ஏப்ரல் 13, 14-ம் தேதி) நீங்கலாக பிற நாட்களில் வேட்பு மனுதாக்கல் நடைபெறுகிறது. ஏப்ரல் 19-ம் தேதி வரை வேட்பாளர்கள் தங்களது மனுக்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
டோக்கன் வழங்க நடவடிக்கை
காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மனுதாக்கல் செய்ய அறிவுறத்தப்பட்டுள்து. காலை 11 மணிக்கு முன்பாகவோ, பிற்பகல் 3 மணிக்கு பிறகோ எக்காரணத்தை கொண்டும் வேட்புமனுக்கள் பெறக்கூடாது என தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.சரியாக 3 மணிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்ய வந்தால் அதில் கடைசியாக வந்த நபருக்கு டோக்கன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் மனுக்களை தாக்கல் செய்யலாம்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் அரசியல் கட்சி வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே மனுதாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். வாகனங்களில் வரும் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிலேயே வாகனங்களை நிறுத்தவேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் இடங்கள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவோர் திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரும் சார் ஆட்சியருமான வந்தனாகர்க்கிடம் மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணையதளம் வழியாக வேட்புமனு
அதேபோல, ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிடுவோர் நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடமும், வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடுவோர் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடமும், ஆம்பூர் தொகுதியில் போட்டியிடுவோர் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுக்களை தாக்கல் செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளது.மேலும், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின்பேரில், htts://suvidha.eci.gov.in என்ற இணையதளம் வழியாகவும் தங்களது வேட்புமனுக்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து தாக்கல் செய்யலாம் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சிவன் அருள் தெரிவித் துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago