தி.மலை அடுத்த வேங்கிக்காலில் குப்பைக் கிடங்கு அமைக்க வேண்டாம் என மனு கொடுக்க வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட, ஆட்சியர் அலுவலக வளாக ரயில்வே 'கேட்' அருகே 3.60 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி குப்பைக் கிடங்கு அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆட்சியரை சந்தித்து முறையிட, ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று மாலை கிராம மக்கள் சென்றனர்.
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், தேர்தல் நடத்தை விதிகளை காரணமாக கூறி, ஆட்சியரை சந்திக்க அனுமதி மறுத்தனர். இதனால், இரண்டு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், காவல்துறையினரின் செயலை கண்டித்து, ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறும்போது, “மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்காக, எங்களது நிலங்களை கொடுத்துவிட்டோம். மீதம் இருக்கின்ற நிலங்களில் கால்நடைகளை வளர்த்தும், விவசாயம் செய்து வருகிறோம். இந்த சூழலில், குப்பைக் கிடங்கு அமைந்தால், நிலத்தடி நீர் மாசு படும். மேலும், குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் நச்சுப்புகை போன்றவற்றால், மக்களுக்கு சுவாச பாதிப்பு ஏற்படும். எனவே, மாற்று இடத்தை தேர்வு செய்து குப்பைக் கிடங்கு அமைக்க வேண்டும்” என்றனர்.
இதையடுத்து, ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்த முக்கியநபர்கள் மட்டும் மனு அளித்தனர். அதில், “ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 3.60 ஏக்கர் பரப்பளவில், ஊராட்சி மூலம் குப்பைக் கிடங்கு அமைக்கப்படவுள்ளது. அந்த இடத்துக்கு அருகே உள்ள காவலர் குடியிருப்பு, கிராமமக்கள் குடியிருப்பு மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை உள்ளது. இப்பகுதியில் குப்பைக் கிடங்கு அமைந்தால், மக்கள் குடியிருக்க முடியாது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். நிலத்தடி நீர் மாசுபடும். எங்களது கோரிக்கையை ஏற்று, குப்பைக் கிடங்கு அமைக்கும் நடவடிக்கையை தடுக்க வேண்டும்” என்ற னர். கிராம மக்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்ததை அடுத்து அனைவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago