ஏக்கல்நத்தம் மலைக்கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி : ஒகேனக்கல் குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வலியுறுத்தல்

By எஸ்.கே.ரமேஷ்

ஏக்கல்நத்தம் மலைக்கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை தொகுதி நாரலப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மலைக்கிராமம் ஏக்கல்நத்தம். இக்கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 100 அடிக்கு திறந்துவெளி கிணறு வெட்டப்பட்டுள்ளது. இக்கிணற்றின் மூலம் கிடைக்கும் தண்ணீரை மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தி வருகின்றனர். போதிய மழை இல்லாத காரணத்தாலும், கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பாலும் கிணற்றில் தண்ணீர் வறண்டு வருகிறது. ஒரு குடம் தண்ணீருக்காக சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் நிலை உள்ளதாக கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக கிராம மக்கள் கூறும்போது, கிராமத்தில் 5 கிணறுகள் உள்ளன. இதில் ஒரு கிணற்றில் கிடைக்கும் தண்ணீர் மட்டுமே குடிக்க உகந்ததாக உள்ளது. அதுவும் குடியிருப்பு பகுதியில் இருந்து சுமார் ஒரு.கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் கிணறுகள் வறண்டு வருகிறது. குடிநீர் கிடைக்கும் கிணற்றில் தண்ணீர் மிகவும் கீழே சென்றுவிட்டது. ஒரு குடம் தண்ணீர் கிடைக்க, 2 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. இதனை வடிகட்டி எடுத்துச் செல்கிறோம். தண்ணீருக்காக விடிய, விடிய கிணற்றின் அருகே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் ஒகேனக்கல் குடிநீர் வழங்க குழாய்கள் பதிக்கப்பட்டன. ஒரு நாள் மட்டுமே தண்ணீர் விடப்பட்ட நிலையில், அழுத்தம் காரணமாக குழாய்கள் பல இடங்களில் உடைந்துவிட்டன. சில இடங்களில் குழாய்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். கிராமத்தில் குடிநீர் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. எனவே, ஒகேனக்கல் குடிநீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும், என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்