கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் உலக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
கோவை அரசு மருத்துவமனையில் பெண்களுக்கான பிரத்யேக கரோனா தடுப்பூசி போடும் முகாம் நேற்று நடைபெற்றது. இதில், மொத்தம் 127 பெண்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டதாக மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்தார்.
கோவை காரமடை வனச் சரகத்துக்கு உள்பட்ட பரளிக்காடு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், மலைவாழ் மக்களுடன் இணைந்து நேற்று மகளிர் தினத்தைக் கொண்டாடினர். கார மடை வனச் சரக அலுவலர் மனோகரன், சுகாதாரப் பணியாளர்களுக்கு மலர்க் கொத்து வழங்கிப் பாராட்டினார்.
திராவிட தமிழர் கட்சி மகளிரணி சார்பில், `பெண் ஏன் அடிமையானாள்?' என்ற தலைப்பிலான கருத்தரங்கம், கோவை ரயில் நிலையம் எதிரில் உள்ள அண்ணாமலை அரங்கில் நடைபெற்றது. உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் அணிச் செயலர் பொற்கொடி தலைமை வகித்தார். `110-வது சர்வதேச மகளிர் தினம்-ஒரு பார்வை' என்ற நூல் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம் சார்பில், தாமஸ் அரங்கில் நேற்றுமுன்தினம் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கவிஞர் இரா.பானுமதி தலைமை வகித்தார்.கவிஞர் ஜெயயின் `இடை-வெளியில் உடையும் பூ' கவிதைதொகுப்பு அறிமுகம் செய்யப்பட்டது.
திருப்பூர்
இணைந்த கரங்கள் அறக்கட்டளை சார்பில் திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசுமகளிர் கல்லூரியில் மாணவி களுக்கு 500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் மகளிர் தின கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஏ.ராணி தலைமைவகித்தார்.
இணைச் செயலாளர் ராஜேஷ்வரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பவித்ராதேவி உட்பட பலர் பங்கேற்றனர். பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு, தனியார் வங்கி சார்பில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது. தொரவலூர் ஊராட்சி மற்றும் கிராமிய மக்கள் இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு, தொரவலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெற்றது.
கருவம்பாளையம் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில், மகளிர் தின நிகழ்வுகளை பட்டிமன்ற நடுவர் ம.ராஜலட்சுமி தொடங்கி வைத்தார். அமைப்பின் தலைவா் எஸ்.ஏ.முத்துபாரதி வரவேற்றார்.
திருப்பூர் மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில், ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. வழக்கறிஞர் பிரபு தலைமை வகித்தார். வழக்கறிஞர் மகாலட்சுமி சிறப்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக பிஎம்எஸ் அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் லோகராஜ் பங்கேற்றார்.
உடுமலை
உடுமலை காமராஜர் நகர் பகுதியில் , பெண் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. விழுதுகள் தன்னார்வ அமைப்பின் திட்ட மேலாளர் வி.கோவிந்தராஜ் வரவேற்றார். பெண் கல்வி, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, துப்புரவுப் பணியாளருக்கான சட்டம் சார்ந்த பாதுகாப்பு, வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து வழக்கறிஞர் சித்ரா பேசினார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago