திருப்பூரில் சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.50 லட்சம் வரை பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, சீட்டு நிறுவன அதிபரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இதுதொடர்பாக திருப்பூர் இடுவாய் மாருதி நகரைச் சேர்ந்த ஹரிதாஸ் (47), மாநகரக் காவல் ஆணையர் க.கார்த்திகேயனிடம் அளித்த புகார் மனுவில், "அரவிந்த் என்பவர் ஏ.எஸ்.முருகன் சிட்ஃபண்ட்ஸ் என்ற பெயரில் சீட்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் ரூ.1 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம் என ரூ.50 லட்சம் வரை சீட்டு நடத்தி வருவதாகவும், அதில் சேர்ந்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி என்னைப்போல பலர் சீட்டு சேர்ந்தோம். நான் ரூ.3 லட்சம் மதிப்புள்ள சீட்டு சேர்ந்திருந்தேன். பணம் முழுவதையும் காசோலை மூலமாக செலுத்தினேன். சீட்டு முதிர்வடைந்தும் எனக்கான தொகை வழங்கப்படவில்லை. என்னைப்போல சுமார் 150 பேரை நம்பவைத்து ரூ.50 லட்சம் வரை ஏமாற்றி உள்ளார்" என்று குறிப்பிட்டிருந்தார்.
போலீஸார் கூறும்போது, "ஹரிதாஸ் புகாரின்பேரில் அரவிந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்படை அமைக்கப்பட்டது. சீட்டு நடத்துவதாகக் கூறி, பொதுமக்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவானது உண்மை என விசாரணையில் தெரியவந்தது. அரவிந்த் (எ) டிக்சன், கோவை மாநகரில் கோகுலம் சிட்ஃபண்ட்ஸ் என்றபெயரில் சீட்டு நிறுவனம் நடத்தி, பொதுமக்களுக்கு பணம் கொடுக்காததால் பொருளாதார குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், திருப்பூர் அலுவலகத்தை மூடிவிட்டு, தற்போது சேலம் மாநகரில்ஏ.எஸ்.முருகன் சிட்ஃபண்ட்ஸ் மற்றும் அரவிந்த் சுயம்புலிங்கம் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் புதிதாக சிட்ஃபண்ட்ஸ் நிறுவனம் ஆரம்பித்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, தனிப்படை போலீஸாரால் சீட்டு நிறுவன அதிபர் நேற்று கைது செய்யப்பட்டு, திருப்பூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.
திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் க.கார்த்திகேயன் கூறும்போது, "முறையாக பதிவு செய்யப்படாத சீட்டு நிறுவனங்களில் பொதுமக்கள் யாரும் சீட்டு போட்டு ஏமாற வேண்டாம். இதுபோல போலி சீட்டு நடத்தி மக்களை ஏமாற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago