வரும் சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக, 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் ஓட்டு என்பதால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தேர்தல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. தற்போது, கரோனா தொற்று அச்சம் நிலவுவதால், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு கூடுதல் வசதியாக, தபால் மூலம் வாக்கு பதிவு செய்யும் வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.
படிவத்தில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத் திறனாளிகள் இல்லத்துக்கே சென்று, முதலில் அவர்களுக்கு இந்தத் திட்டம் இருப்பதை தெரிவித்து ஒப்புதல் பெறவேண்டும். அதன்பிறகு, அவர்கள், 12டி படிவத்தில், கையொப்பம் இட்டு, நாங்கள் இதற்கு தயார் என்று சொன்னால், அந்த படிவத்தை வாங்கி வந்து, பட்டியல் எடுத்து, தபால் வாக்கு அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இது, முதல்முறையாக செய்வதால், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் இதுகுறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்காக தாம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் டி. ரவிச்சந்திரன் பயிற்சி அளித்தார். தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து செல்வது, மீண்டும் கொண்டு வருவது, இயந்திரத்தில் வாக்களிப்பது, தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலர்களும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது போன்ற ஆலோசனைகளை வழங்கினார். முகாமில் உதவி தேர்தல் அலுவலர்கள் சரவணன், பெருமாள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தபால் வாக்கு தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில் சோழிங்கநல்லூர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று '12டி' படிவம் வழங்கும் பணியை ஆட்சியர் அ. ஜான்லூயிஸ் தொடங்கிவைத்து, ஆய்வு மேற்கொண்டார். கரோனா காலம் என்பதால் தபால் வாக்குகள் குறித்தும், யார் யாருக்கு தபால் வாக்குகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்குகள் கொடுப்பது எப்படி, அதற்கான பணிகள் என்ன என்பது குறித்து அலுவலர்களுக்கு ஆட்சியர் விளக்கினார்.
இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், ஆலந்தூர், பெரும்புதூர், காஞ்சிபுரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தலைமையில் நேற்று தேர்தல் பணிகள் தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத் திறனாளிகள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வாக்காளர்களுக்கு அஞ்சல் வாக்குச் சீட்டு அளிப்பது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
மேலும், வாக்குச் சாவடி மையங்களில் கடைபிடிக்க வேண்டிய பல்வேறு நடைமுறைகள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago