திருவள்ளூர் அருகே அரியத்தூர் ஊராட்சியில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
பூண்டி அடுத்துள்ள அரியத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட அப்துல்கலாம் இருளர் குடியிருப்பில் 100-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர், தெரு விளக்கு, மின்சாரம், சாலை வசதி, வாக்காளர் அடையாள அட்டை, குடிமனை பட்டா போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என கூறப்படுகிறது.
இந்த இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து அரை கி.மீ. தொலைவில்தான் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி உள்ளது. ஆனால், இப்பகுதிக்கு குடிநீர் இணைப்பு இல்லை.
குடிநீருக்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை. இந்நிலையில், இம்மக்களுக்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர், குடிநீர் வசதியை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அதன் விளைவாக, ரூ.60 ஆயிரம் மதிப்பில், ஆழ்துளைக் குழாய் இணைப்புடன் கூடிய 2,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி வழங்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது.
இந்நிகழ்வில், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க மகளிர் துணைக் குழு தென் மண்டல பொருளாளர் வி.ஜானகிராமன், தென் மண்டல துணைத் தலைவர் ஆர்.சர்வமங்களா, சென்னை கோட்டம்-2 தலைவர் பூ.மனோகரன், கோட்ட செயலாளர் மா.தனச்செல்வம், மகளிர் துணைக் குழு பொறுப்பாளர் த.லதாமங்கேஷ்வரி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
50 ஆண்டுகளாக இருந்து வந்த குடிநீர் பிரச்சினைக்கு காப்பீடு கழக ஊழியர் சங்கத்தினர் முற்றுப்புள்ளி வைத்ததால், இருளர் இன மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago