திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு - 20% வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு :

சட்டப்பேரவை தேர்தலுக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 8,388 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 6,564 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 6,452 வாக்குப் பதிவை உறுதிச் செய்யும் இயந்திரங்கள் திருவள்ளூர், லட்சுமிபுரத்தில் உள்ள தமிழக அரசின் சேமிப்புக் கிடங்கில் தயார் நிலையில் உள்ளன.

அதில், முதல் கட்டமாக 20 சதவீத வாக்குப் பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 25 சதவீத வாக்குப் பதிவை உறுதிச் செய்யும் இயந்திரங்களை குலுக்கல் முறையில், 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்வு செய்யும் பணி நேற்று நடந்தது.

மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைத்த இப்பணியில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான முத்துசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

பின்னர் தேர்வு செய்யப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவை வாகனங்கள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இப்பணியின் போது, மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதல் கட்டமாக சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை பாதுகாப்பு அறைகளில் `சீல்’ வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீட்டுக்குப் பிறகு, 2-ம் கட்டமாக தேர்தல் பார்வையாளர் முன்னிலையில், 80 சதவீத வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மாவட்டத்தில் இதுவரை தேர்தல் பறக்கும் படை, நிலைக் குழுக்கள் வாயிலாக கணக்கில் வராத ரூ.2.29 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்