வேலூர் மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பயன்படுத்தி வரும் 30 அரசு வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை அரசியல் கட்சியினர் வழங்குவதை தடுக்க தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படையினர் என மொத்தம் 30 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தினசரி வாகன தணிக்கையில் ஈடுபட்டு தேர்தல் நடத்தை விதிகளை மீறி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படையினர் பயன்படுத்தி வரும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது. வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட நிலையில், வரும் நாட்களில் அந்த வாகனங்கள் எங்கு செல்கிறது, எவ்வளவு நேரம் ஒரே இடத்தில் நிறுத்தப்படுகிறது போன்ற விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியும், சென்னை மற்றும் புதுடெல்லியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியும் கண்காணிக்க முடியும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago