ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குவதை உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் பணியாற்ற உள்ள மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், துணை வட்டாட்சியர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. இதனை, மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தொடங்கி வைத்துப் பேசும்போது, ‘‘வாக்குப்பதிவுக்கு முன்தினம் காலை 7 மணியளவில் வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்களுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றுடன் பணி நியமன ஆணைகளை வட்டாட்சியர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண் டும்.
கோவிட்-19 பாதுகாப்பு தொடர்பான பொருட்களையும் அதற்குரிய வாகனத்தின் விவரங்களையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி பணியாளர்களுக் கான பயிற்சியில் பங்கேற்று பிற்பகல் 2.30 மணியளவில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்களில் செல்ல வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் வெப் கேமராக்களை உரிய இடத்தில் பொருத்தி சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
வாக்குப்பதிவு நாளன்று அதிகாலை 4.30 மணியளவில் இருந்து வாக்குச்சாவடி அலுவலர்களை தயார்படுத்த வேண்டும். வாக்குச்சாவடிகளில் தெர்மல் ஸ்கேனர், சானிடைசர், கையுறைகள் விநியோகம் செய்யும் 2 நபர்கள் காலை 6 மணிக்குள் வந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். காலை 6.45 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு முடிந்ததை உறுதி செய்ய வேண்டும். காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்க வேண்டும். காலை 9 மணியில் இருந்து ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்களை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago