தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகுவதால் - ஏரியில் இறங்கி விவசாயிகள் போராட்டம் :

வல்லம் அருகே ஏரிக்கு தண்ணீர் வரத்தின்றி பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, விவசாயிகள் நேற்று ஏரியில் இறங்கி தர்ணாவில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே திருமலைசமுத்திரம் பகுதியில், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலிலிருந்து பிடாரி ஏரிக்கு காவிரி நீர் வருவது வழக்கம். இந்த ஏரி தண்ணீர் மூலம் அப்பகுதியில் ஒரு போக சம்பா சாகுபடி மேற்கொள்ளப்படும். இதேபோல, நிகழாண்டு 250 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது, அந்த நெற்பயிர்கள் கதிர்விடும் தருவாயில் உள்ள நிலையில், பிடாரி ஏரியில் தண்ணீர் இல்லாததால், பயிர்கள் அனைத்தும் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு பிப். 26-ம் தேதி முதல் ஆட்சியர் மற்றும் அனைத்து பொதுப் பணித் துறை அலுவலர்களிடமும் அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், அதிருப்தியடைந்த விவசாயிகள் 100 பேர் நேற்று பிடாரி ஏரியில் இறங்கி தர்ணாவில் ஈடுபட்டனர். இதில், காய்ந்த நெற்கதிர்களை கையில் ஏந்தியபடி பெண்கள் பங்கேற்றனர். இப்போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், ஒன்றியச் செயலாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE