- 167 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு :

By செய்திப்பிரிவு

தேர்தல் பயிற்சி மற்றும் பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக, திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குரிய தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் நேற்று அனுப்பிவைத்தார்.

திருப்பூர் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்களில், முதல்நிலை சரிபார்ப்பு பணி முடிந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வழங்கவும், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளவும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கில் இருந்து, 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உரிய தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

தாராபுரம் தொகுதிக்கு - 17, காங்கயம் - 19, அவிநாசி - 20, திருப்பூர் வடக்கு - 27, திருப்பூர் தெற்கு - 20, பல்லடம் - 27, உடுமலைப்பேட்டை - 19, மடத்துக்குளம் 18 என மொத்தம் தலா 167 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபேட்இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. அதிகபட்சமாக ,திருப்பூர் வடக்கு மற்றும் பல்லடம் தொகுதிக்கு 27 இயந்திரங்கள் அனுப்பப்பட்டன.

தேர்தலுக்கு இல்லை

இதுதொடர்பாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறும்போது, "சம்பந்தப்பட்ட பகுதிகளிலுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களின் கட்டுப்பாட்டில், மேற்குறிப்பிட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருக்கும். தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்பதை விளக்கும் வகையில் பேருந்து நிலையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதை முதல்முறை வாக்காளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அதேபோல, இந்த இயந்திரங்களைக் கொண்டு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் மீது மஞ்சள் நிறத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் பயிற்சி, விழிப்புணர்வுக்கு மட்டும் என்பதால், சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த 167 இயந்திரங்கள் பயன்படுத்தப்படாது" என்றனர்.

இதைத்தொடர்ந்து, திருவள்ளூர்மாவட்டத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்ட 100 விவிபேட் இயந்திரங்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

திருப்பூர் கோட்டாட்சியர் ஜெகநாதன், மின்னணு வாக்குப்பதிவு பொறுப்பு அலுவலர் குணசேகரன், தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்