பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், பொதுக் கழிப்பிடம் மூடப்பட்டுள்ளதாகக் கூறி திருப்பூர் மாநகர மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி எஸ்.வி. காலனி ஜோதி நகர் முதல் வீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். தொழிலாளர்கள் நிறைந்த இந்த குடியிருப்பு பகுதியிலுள்ள பெரும்பாலான வீடுகளில், கழிப்பிட வசதி இல்லை. அப்பகுதியிலுள்ள பொதுக் கழிப்பிடத்தைதான் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக, கழிவறையில் இருந்து கழிவுகள் செல்லும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் உள்ள சாக்கடைக்கு கழிவுகள் செல்கிறது. இதனால், ஜோதி நகர் முதல் வீதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
பொதுமக்கள் நாள்தோறும் கழிவறையை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். தொழிலாளர்கள் தினமும் உரிய நேரத்தில் வேலைக்கு செல்ல வேண்டியுள்ள நிலையில், கழிவறை வசதி இல்லாததால் பெண்கள் உட்பட அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கின்றனர் அப்பகுதி பொதுமக்கள்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
பட விளக்கம்
திருப்பூர் எஸ்.வி. காலனி ஜோதி நகரில் மூடப்பட்டுள்ள பொதுக் கழிப்பிடம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago