பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு: : புதுக்கோட்டை ஆட்சியர் தகவல் :

புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்களர்கள் அச்சமின்றி வாக்களிக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் என ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பி.உமா மகேஸ்வரி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கலிபுல்லாநகர், பூவரசகுடி, கைக்குறிச்சி ஆகிய பதற்றமான வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 1,902 வாக்குச்சாவடிகள் உள்ளன.இவற்றில், 125 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அனைவரும் அச்சமின்றி வாக்களிக்கும் விதமாக இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும்.

மேலும், குடிநீர் வசதி, மின் விளக்குகள், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இருப்பதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

இதைத்தொடர்ந்து, ஆலங்குடி பேருந்து நிலையத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டதை ஆட்சியர் பார்வையிட்டார்.

ஆய்வின்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பொன்மலர், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ளப்பட வேண்டிய கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத் துறை அலுவலர்களுடன் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி ஆலோசனை மேற்கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE