ஈரோடுமாவட்டம் கோபியை அடுத்த பங்களாபுதூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக, ஹரியாணா மாநிலத்தில் இருந்து கன்டெய்னர் லாரி மூலம், புத்தகப்பைகள் நேற்று கொண்டு வரப்பட்டன.
மூட்டைகளாகக் கட்டப்பட்ட புத்தகப் பைகள் (ஸ்கூல் பேக்) பள்ளியில் இறக்கப்படுவதை அறிந்த திமுகவினர் அங்கு திரண்டனர். தேர்தல் கண்காணிப்புக்குழு அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, பங்களாபுதூர் அரசுப் பள்ளிக்கு கொண்டுவரப்பட்ட 409 மூட்டை களில், 13 ஆயிரத்து 67 பைகள் உள்ளன. கடந்த பிப்ரவரி 23-ம் தேதியே ஹரியாணாவில் இருந்து கிளம்பிய லாரி, தாமதமாக தற்போது வந்துள்ளது, என்றனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் பழனிசாமி படங்களுடன் கூடிய புத்தகப்பைகளை விநியோகிக்கக் கூடாது என திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, புத்தகப் பைகளை அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்று, ஒரு அறையில் இறக்கி வைத்து பூட்டி, சீல் வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago