ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வலியுறுத்தி, பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளின் வாழ்வுரிமை காக்கும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம், பொங்கலூர் பிஏபி அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது.
பிஏபி பொங்கலூர் பகிர்மான குழுத் தலைவர் டி.கோபால் தலைமை வகித்தார். பகிர்மான குழுத் தலைவர்கள் ஆ.சாமியப்பன், எம்.வரதராஜ், கே.நல்லதம்பி, ரா.ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குண்டடம் பகிர்மான குழுத் தலைவர் ப.ஈஸ்வரன் வரவேற்றார். திருமூர்த்தி நீர்தேக்க குழுத் தலைவர் கே.பரமசிவம் தொடங்கி வைத்தார்.
இதில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:
20-ம் நூற்றாண்டின் இணையற்ற பாசனத் திட்டம் என்றும், அறிவியலும், பொறியியலும் இணைந்த மகத்தான பாசனத் திட்டம் என்றும் வல்லுநர்களால் போற்றப்படும் பிஏபி திட்டத்தில், இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கும் ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும். நீர்ப்பாசனத்துக்கு என்று தனித்துறையை ஏற்படுத்த வேண்டும். 2014-ம் ஆண்டு முதல் நடத்தப்படாமல் இருக்கும் பாசன அமைப்புகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.
காண்டூர் கால்வாயில் விடுபட்ட பகுதிகள், பிரதான கால்வாய் மற்றும் கிளை கால்வாய்கள் மிகவும் சிதிலமடைந்துள்ளன. நீர்க்கசிவு அதிகம் ஏற்பட்டு, நீர் விரயமாவதைத் தடுக்க கால்வாய்களை சீரமைப்பதற்கான நிதியை ஒதுக்க வேண்டும். பிஏபி திட்டத்தில் 1000 ஏக்கருக்கு கீழ் பாசனம் பெறும் கால்வாய்களிலும் ஒரு மடை விட்டு ஒரு மடை பாசனத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
பிஏபி திட்டத்தில் நீர் பங்கீடு செய்வது தொடர்பாக உள்ள குளறுபடிகளை நீக்கும் வகையில், காவிரி தொழில்நுட்பக் குழு இயங்குவதுபோல பிஏபி திட்டத்திலும் ஒரு தொழில்நுட்பக் குழுவை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
உண்ணாவிரதத்தை, திருமூர்த்தி நீர்த்தேக்க கூட்டமைப்பின் தலைவர் எஸ்.ஆர். ராஜகோபால் நேற்று மாலை நிறைவு செய்துவைத்தார்.
உடுமலை, பொங்கலூர், பல்லடம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
பட விளக்கம்
பொங்கலூர் பிஏபி அலுவலகம் அருகே நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பிஏபி பாசன விவசாயிகள்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago