ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கட்சி வேட் பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்து மாவட்டத் தேர்தல் அலு வலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:
அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் சாதி, மதம், மொழி, இன வேறுபாட்டை ஏற்படுத்தும் வகையில் மக்களிடம் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது. சாதி, மத அடிப்படையில் வாக்குச் சேகரிக்கக்கூடாது. இரவு 10 மணிக்கு மேல் காலை 6 மணி வரை தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது.
வழிபாட்டுத் தலங்களில் கண்டிப்பாக யாரும் பிரச்சாரம் செய்யக்கூடாது. பொது இடங் களில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றிக் கொள்ள வேண்டும். கட்சியின் சுவர் விளம்பரங்களை அகற்றும் பணி உள்ளாட்சி அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணிகளுக்கு கட்சிப் பிரதி நிதிகள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். நகர்ப்புறப் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் சுவர்களில் தேர்தல் விளம்பரம் செய்ய அனுமதி கிடையாது.
கிராமப் பகுதிகளில் தனியார் இடங்களில் முறையான அனுமதி பெற்று விளம்பரம் செய்யலாம்.
அரசுக்குச் சொந்தமான கட்டிடங்கள் மற்றும் புறம்போக்கு நிலங்களில் கட்சி அலுவலகங்கள் அமைக்கக்கூடாது.
வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் மற்றும் வாகனம், ஒலிப்பெருக்கி அனுமதிக்கு https://suvidha.eci.gov.in/login என்ற இணையதள முகவரியில் 48 மணி நேரத்துக்கு முன்னதாக விண்ணப்பித்து அனுமதி பெறலாம். சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியாக நடக்க அனைத்துக் கட்சியினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago