தாம்பரம் பகுதியில் உள்ள பேரூராட்சிகளுக்கான திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளுக்காக தாம்பரம் அகரம்தென் கிராமத்தில் 4 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம் அருகே உள்ள சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பீர்க்கன்காரணை உள்ளிட்ட பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதில், பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குப்பையை வீடு வீடாகச் சென்று சேகரித்தாலும் அதை உரமாக மாற்றுவதற்கு இடவசதி இல்லாததால், ஏரி அருகே கொட்டப்பட்டு வருகிறது. இதனால் நீர்நிலைகளும் மாசுப்படுவதாக ஏராளமான புகார்கள் வருகின்றன. இதனால் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் சிட்லபாக்கம் பேரூராட்சியில் குப்பையை தரம் பிரித்து எடுத்து இன்சினேட்டர் இயந்திரம் மூலம் எரியூட்ட திட்டமிடப்பட்டது. இது முறையாக அனுமதி பெறாமல் வைக்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு அபராதம் விதித்தது.
மக்கள் எதிர்ப்பு
இதற்கிடையே செங்கை மாவட்ட நிர்வாகத்திடம் திடக்கழிவு மேலாண்மை பணிக்கான, இடத்தை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுத்தலின்படி தாம்பரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் அகரம்தென் கிராமத்திலுள்ள அனாதி நிலம் என்று அறியப்படும், 4 ஏக்கர் பரப்பு கொண்ட நிலத்தை பேரூராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளுக்கு ஒதுக்கீடு செய்தனர். இதைத் தொடர்ந்து, உள்ளூர் மக்கள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதுகுறித்து பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது: இந்த இடத்தில் பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரித்து உரம் தயாரிக்கப்படும், மேலும் தேவையற்ற குப்பை கழிவுகள் இன்சினேட்டர் இயந்திரம் மூலம் எரியூட்டப்படும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago