தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பயன்படுத்தி வந்த அரசு வாகனம், மாவட்ட நிர்வாகத்தினரால் நேற்று முன்தினம் திரும்பப் பெறப்பட்டு, ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
அதேபோல, ஒசூர் சாலையில் உள்ள கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் உள்ளிட்ட கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்களின் அலுவலகங்களும் பூட்டப்பட்டு, மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளால் ‘சீல்’ வைக்கப்பட்டன.
மேலும் அனைத்து சாலைகளிலும் உள்ள சுவர்களில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்களை வெள்ளை வர்ணம் பூசி அழிக்கும் பணியும், சுவரொட்டிகளை கிழிக்கும் பணியும் தொடங்கியுள்ளது. அவிநாசி சாலை, ஹோப்காலேஜ் உள்ளிட்ட மாநகரிலும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் அந்தந்த உள்ளாட்சித் துறை அலுவலர்கள், சாலைப் பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ‘‘அனைத்து அரசு அலுவலகங்களிலும் வைக்கப்பட்டிருந்த தமிழக முதல்வரின் படங்கள் அகற்றப்பட்டுள்ளன. முதல்வர், அமைச்சர்கள் உருவம் பதிக்கப்பட்ட விளம்பரங்கள், அறிவிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. ஓரிரு தினங்களுக்குள் மாவட்டத்தில் உள்ள சுவர் விளம்பரங்கள் முழுமையாக அழிக்கப்படும், சுவரொட்டிகள் கிழிக்கப்படும்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago