கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள 49 கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணிக்கு, டாடாபாத் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று நேர்காணல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, விண்ணப்பதாரர்கள் பள்ளி முன் குவிந்தனர்.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு, நேர்காணல் ரத்து செய்யப்பட்டதாக அங்கு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தேர்தல் முடிந்த பின்னர் நேர்காணல் நடத்தப்படும் என விண்ணப்பதாரர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த விண்ணப்பதாரர்கள், பள்ளி முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தககலறிந்து வந்த ரத்தினபுரி போலீஸார் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து விண்ணப்பதாரர்கள் கூறும்போது, "கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணிக்கு ஏற்கெனவே 3 முறை நேர்காணல் அறிவிக்கப்பட்டு, ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்ந்தால், எங்களுக்கு வயது வரம்பு முடிந்து, மீண்டும் இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, அடுத்தமுறை நடைபெறும் நேர்காணலின்போது, தற்போது விண்ணப்பித்த அனைவரையும் நேர்காணலுக்கு அழைக்க வேண்டும்’’ என்றனர்.
இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகளிடம் தெரிவிப்பதாக, கால்நடைத் துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, விண்ணப்பதாரர்கள் மறியலைக் கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago