கோவை மாவட்டத்தில் 60 பறக்கும் படை

By செய்திப்பிரிவு

கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் தொடர்பாக அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் கு.ராசாமணி நேற்று ஆலோசனை நடத்தினார்.

தேர்தல் பிரிவு உயர் அதிகாரிகள் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம், பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கவும், தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் புகார்கள் தொடர்பாக விசாரிக்கவும், தகவல் கிடைக்கும் இடங்களில் சோதனை நடத்தவும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் துணை வட்டாட்சியர் அந்தஸ்திலான அதிகாரி தலைமையில், ஒரு எஸ்.ஐ, 3 போலீஸார், ஒரு வீடியோ பதிவாளர், ஒரு ஓட்டுநர் இருப்பர். ஒரு தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் 30 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல, முக்கிய இடங்களில் தற்காலிகமாக சோதனைச்சாவடி ஏற்படுத்தி வாகனத் தணிக்கை மேற்கொள்ள, ஒரு தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் 30 நிலையான பறக்கும் படைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவர்கள் குறிப்பிட்ட மணி நேரங்களுக்கு ஒருமுறை இடத்தை மாற்றி வாகனத் தணிக்கை மேற்கொள்வர். இவர்களது வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி, கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படும். இவர்கள் சோதனையின்போது, பணம், பரிசுப் பொருட்கள், அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதலான தொகை, முறையான கணக்கு இல்லாத தொகை ஆகியவற்றை பறிமுதல் செய்தால் உடனடியாக தங்களது தொகுதிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று (பிப். 28) முதல் இக்குழுவினரின் சோதனை மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்