ரொக்கப் பணம் எடுத்துச் செல்லும் உச்ச வரம்பை அதிகரிக்க வேண்டும் தேர்தல் அதிகாரிகளுக்கு தொழில் துறையினர் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

ரொக்கப் பணம் எடுத்துச் செல்லும் உச்ச வரம்பை அதிகரிக்க வேண்டும் என தொழில் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகளின்படி, தனிநபர் ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேலான தொகையை ரொக்கமாக எடுத்துச்செல்லும்போது உரிய ஆவணங்கள் வைத்திருத்தல் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை தொழில் துறையினர் மட்டுமின்றி, பொதுமக்கள், விவசாயிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என இன்ஜினீயரிங் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் (சீமா) தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதன் தலைவர் கார்த்திக் கூறியதாவது: பம்ப்செட் உள்ளிட்ட பல்வேறு தொழில் துறையினருக்கு மார்ச், ஏப்ரல் மாதங்கள் சீசன் காலம் ஆகும். தண்ணீரின் தேவை அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் பம்ப்செட்டுகளை வாங்க ஆர்வம் காட்டுவார்கள். வேளாண் துறையில் குறைந்தபட்சமாக பயன்படுத்தப்படும் 5 எச்.பி. திறன் கொண்ட பம்ப் செட்டை நிறுவ ரூ.1.50 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை தேவைப்படும். கிணற்றுக்கான மோட்டார் பம்ப் செட் நிறுவ ரூ.60 ஆயிரம் தேவைப்படும். இன்றைய சூழலில் 10 சதவீத விவசாயிகள் மட்டுமே ஆன்லைன் மற்றும் அனைத்து வகையான டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையை பின்பற்றி வருகின்றனர். இந்த சூழலில் ரூ.50 ஆயிரத்துக்கும் குறைவான தொகை மட்டும் கையில் வைத்திருக்க வேண்டும் என்பதும், அதற்குமேல் கொண்டு வரும்போது ஆவணங்கள் கேட்பதும் பம்ப்செட் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களை உரிய காரணம் இன்றி சோதனை என்ற பெயரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் துன்புறுத்தக் கூடாது. தொழில் துறையினர், பொதுமக்கள் நலன்கருதி ரொக்கப் பணம் எடுத்துச் செல்லும் உச்சவரம்பை தேர்தல் ஆணையம் அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்