முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 24-ம் தேதி வேட்டி, சேலை மற்றும் பாத்திரங்கள் அன்பளிப்பாக வழங்க பொதுமக்களுக்கு அதிமுகவினர் டோக்கன்கள் வழங்கினர். நேற்று முன்தினம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பரிசுப் பொருட்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, பரிசுப் பொருட்களை வால்பாறை ரொட்டி கடை பகுதியில் உள்ள பாறைமேடு பகுதியில் உள்ள 3 வீடுகளில் இருப்பு வைத்தனர்.
இதுகுறித்த தகவலின்பேரில், வருவாய் துறையினர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த வீடுகளுக்கு வருவாய் துறையினர் ‘சீல்’ வைத்தனர்.
இது குறித்து வால்பாறை நகர திமுக பொறுப்பாளர் பால்பாண்டி கூறும்போது, ‘‘வால்பாறையில் தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாக பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்க அதிமுகவினர் திட்டமிட்டிருந்தனர். எங்களது புகாரின்பேரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்” என்றார்.
வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு கூறும்போது,‘‘ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பொது மக்களுக்கு வழங்க பரிசுப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டன. திடீரென்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் வழங்க முடியவில்லை. இதனைத்தான் திமுகவினர் தேர்தலுக்காக வழங்க பதுக்கி வைத்திருப்பதாக சொல்லிவருகின்றனர்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago