சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தபாலில் வாக்களிக்க 12டி படிவம் அளிக்க வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.
சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி மண்டல அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் நடந்தது.
கூட்டத்துக்கு, தலைமை வகித்து தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ரவிச்சந்திரன் பேசியதாவது:
சேலம் தெற்கு தொகுதியில் 2,59,229 வாக்காளர்கள் உள்ளனர். 381 வாக்குச்சாவடிகள் 69 பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகள் 33 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு மண்டல அலுவலர், உதவி மண்டல அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். மண்டல அலுவலர்களின் கீழ் 26 கண்காணிப்பாளர்கள், 264 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் விவரங்களை சேகரிக்க வேண்டும். இவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கலாம். தபால் மூலம் வாக்களிக்கலாம்.
தபாலில் வாக்குப் பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்களின் வீடுகளுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சென்று படிவம் 12 டி-யை பூர்த்தி செய்து படிவங்களை தேர்தல் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து 5 தினங்களுக்குள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநகர பொறியாளர் அசோகன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சண்முகவடிவேல், ரமேஷ் பாபு, பார்த்த சாரதி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago