நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுக்களுக்கான பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.மெகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படை குழுக்கள் வீதம் 6 தொகுதிகளில் மொத்தம் 18 குழுக்களும், நிலையான கண்காணிப்பு குழுவினர் 18 குழுக்களும் 8 மணி நேரத்திற்கு சுழற்சி அடிப்படையில் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொள்வர்.
வீடியோ கண்காணிப்புக் குழுவினர் ஒரு தொகுதிக்கு 1 குழு வீதம் 6 தொகுதிகளில் 6 குழுவினர் செயல்படவுள்ளனர். தேர்தல் பறக்கும் படையினர், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் மற்றும் வாக்காளர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது போன்ற புகார்கள், வாக்காளர்களுக்கு பணம், மதுபானங்கள் மற்றும் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட புகார் வந்தால் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு அதன் விவரங்களை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.
வாகன சோதனையின் போது உரிய ஆவணங்களின்றி பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் எடுத்துச் சென்றால் அவற்றை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும். பொது இடங்களில் கட்சிக் கொடிகள், சுவரொட்டிகள், விளம்பரங்கள் இருந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வீடியோ கண்காணிப்பு குழுக்கள் கட்சி பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், பிரச்சார பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றின் செலவினம் குறித்த ஆதாரங்கள், பயன்படுத்தப்படும் பொருட்கள் குறித்த செலவினங்கள் பற்றிய ஆதாரங்கள் ஆகியவற்றைக் கண்காணிக்க வேண்டும், என்றார்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago