ஸ்தலசயன பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம் கடலில் இறங்கி பக்தர்கள் புனித நீராடினர்

By செய்திப்பிரிவு

ஸ்தலசயன பெருமாள் கோயிலில் மாசிமக பிரம்மோற்சவ விழாவில் நடைபெற்ற தீர்த்தவாரியில், சக்கரத்தாழ்வாருடன் கடலில் இறங்கி பக்தர்கள் புனித நீராடினர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் நகரில் திருக்கடல்மல்லை எனப்படும் ஸ்தலசயன பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு, மாசிமக உற்சவமாக நேற்று கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், காலை 8 மணிக்கு உற்சவர் ஸ்தலசயன பெருமாள் மற்றும் ஆதிவராஹ பெருமாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தின் மீது எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மேலும், நான்கு ராஜவீதிகளில் வீதியுலா வந்து கடற்கரையில் எழுந்தருளினர்.

சிறப்பு வழிபாடுகள்

பின்னர், தீர்த்தவாரி நிகழ்ச்சியாக சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்களுடன் சக்கரத்தாழ்வார் கடலில் இறங்கினார். அப்போது, சுவாமியுடன் சேர்ந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பெண்கள் மஞ்சள் பூசி கடலில் இறங்கி புனித நீராடினர். தீர்த்தவாரி நிகழ்ச்சி முடிந்ததும், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர், ஸ்தலசயன பெருமாள், ஆதிவராஹ பெருமாள் கோயில்களுக்கு ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சங்கர் தலைமையில் மேலாளர் சந்தானம் உள்ளிட்ட பணியாளர்கள் மேற்கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்