தக்கலையில் மெய்ஞான மாமேதை என போற்றப்படும் ஷெய்கு பீர்முகம்மது ஸாகிபு ஒலியுல்லா தர்காவில் ஞானப்புகழ்ச்சி பாடும் நிகழ்வு விடிய, விடிய நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தக்கலை மெய்ஞான மாமேதை ஷெய்கு பீர்முகம்மது ஷாகிபு ஒலியுல்லா தர்கா ஆண்டு விழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் மவுலிது மஜ்லிஸ், மார்க்க பேருரை ஆகியவை நடைபெற்றன. இதில் கல்வியாளர்கள், பேச்சாளர்கள் பங்கேற்று பேருரை நிகழ்த்தினர்.
விழாவின் முக்கிய நிகழ்வான ஞானப்புகழ்ச்சி பாடுதல் 14-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் மாலையில் தொடங்கியது. இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நேற்று காலை வரை விடிய, விடிய ஞானப்புகழ்ச்சி பாடுதல் நடைபெற்றது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழா நிறைவு நாளான நேற்று மாலை நேர்ச்சை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நாளை இரவு 7 மணிக்கு 3-ம் ஸியாறத் நேர்ச்சை வழங்கும் பாரம்பரிய நிகழ்வு நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago