குமரி மாவட்டத்தில் நாளை ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம் தேங்காய்பட்டணம் துறைமுக நிகழ்ச்சியில் மாற்றம்

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (1-ம் தேதி) காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற் கொள்கிறார்.

சட்டப்பேரவையுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தென்மாவட்டங்களில் நேற்று முதல் ராகுல்காந்தி தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கெண்டு வருகிறார்.

நாளை ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வரும் அவர், காலை 10 மணியளவில் சர்ச் ரோட்டில், ரோடு ஷோ மூலம் பிரச்சாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து அகஸ்தீஸ்வரத்தில் உள்ள முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். பின்னர்நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இந்திராகாந்தி சிலை முன்பு பிரச்சாரம் செய்கிறார். அங்கிருந்து தக்கலை செல்லும் அவர், காமராஜர் சிலை முன்பு மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

மதியம் 1 மணிக்கு முளகுமூடு ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் குளச்சல் செல்லும் ராகுல்காந்தி, காமராஜர் சிலை முன்பு பிரச்சாரம் செய்கிறார். தொடர்ந்து ரீத்தாபுரம் சந்திப்பிலும், கருங்கல் ராஜீவ்காந்தி சிலை முன்பும் பொதுமக்களை சந்திக்கிறார். மாலையில் தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் கடலுக்குள் படகில் நின்றவாறு மீனவர்களுடன் அவர் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் இந்நிகழ்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாறகாணியில் மீனவர்களை ராகுல்காந்தி சந்தித்துபேசுகிறார். பின்னர் குழித்துறை சந்திப்பிலும், நிறைவாக களியக்காவிளையிலும் பிரச்சாரம் மேற் கொள்கிறார்.

மாலையில் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்கிறார். ராகுல்காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க காங்கிரஸ்மாவட்டத் தலைவர்கள் ராஜேஷ்குமார் எம்எல்ஏ, ராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் விஜய்வசந்த், தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்