அரசியல் கட்சி ஆதரவாளர்கள் பிற கட்சியினர் கூட்டங்களில் இடையூறு செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசும்போது, ‘‘அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். சாதி, சமயம், மொழி வேறுபாடுகளை தூண்டும் வகையில் அறிவிப்புகள் வெளியிடக் கூடாது. வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்வது, சுவரொட்டிகள், பாடல்கள் இசைத்தல் ஆகியவை செய்யக்கூடாது.
பள்ளி, கல்லூரி வளாகங்களில் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை. தனியார் பள்ளி கல்லூரி நிர்வாகத்தினர் அனுமதி அளிக்கும் பட்சத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனுமதியுடன் கூட்டம் நடத்தலாம்.
அரசியல் கட்சி வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் பிற கட்சியினர் ஏற்பாடு செய்கின்ற கூட்டங்களில் இடையூறு செய்யக்கூடாது. வேட்பாளரின் கடந்த கால சாதனைகள், பணிகள் ஆகியவை பற்றி மட்டுமே விமர்சனம் செய்ய வேண்டும். அவர்களது சொந்த வாழ்க்கை குறித்த நிகழ்வுகள் பற்றி குறை கூறுவதைத் தவிர்க்க வேண்டும். தனிநபர் அரசியல் கருத்துக்கள், நடவடிக்கைகளுக்காக அவர்களின் வீடுகளுக்கு முன்பாக போராட்டம் நடத்தக் கூடாது.
அரசியல் கட்சியினரின் கூட்டங்கள் நடத்துவது குறித்து முன்கூட்டியே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ஒரு நபர் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லும்போது, அதற்குரிய ஆவணங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர் ரூ.1 லட்சம் வரை ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லலாம்.
தேர்தல் விதிகளின்படி ஒரு நபர் ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் மதிப்பிலான பரிசுப்பொருட்களை ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லக்கூடாது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago