உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.48.87 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம்

By செய்திப்பிரிவு

உடுமலை நகராட்சிக்குட்பட்ட எஸ்.என்.ஆர். லே-அவுட் பகுதியில் உள்ள தங்கம்மாள் ஓடையில் ரூ.12.97 கோடி மதிப்பீட்டில், தூர்வாருதல் மற்றும் கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதனை நகராட்சி ஆணையர் பெ.கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் தங்கராஜ், உதவிப் பொறியாளர் லதா ஆகியோர் தொடங்கி வைத்தனர். உடுமலை மத்தியப் பேருந்து நிலையத்தை ஒட்டிய காலியிடத்தில் ரூ.3.75 கோடி மதிப்பில் கூடுதல் பேருந்து நிலையம் அமைக்கும் பணி, பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது.

இதேபோல ரூ.15.98 கோடியில் கழுத்தறுத்தான் பள்ளத்தில் தடுப்புச் சுவர் கட்டுதல், ரூ.6.84 கோடியில் சந்தை வளாகம் மேம்படுத்துதல், ரூ.5.91 கோடி மதிப்பில் திருப்பூர் சாலை, தளி சாலை, எலையமுத்தூர் சாலை, ராஜேந்திரா சாலை, பழநி- பொள்ளாச்சி மற்றும் தாராபுரம் சாலை ஆகிய பகுதிகளில் தெருவிளக்குகள் அமைத்தல், ரூ.1 கோடி செலவில் நகராட்சி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரூ.1.42 கோடி மதிப்பில் அண்ணா பூங்கா, ஜிடிவி நகர் பூங்கா, ஸ்டேட் வங்கி காலனி, சாத்விக் நகர், ராஜலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் நேற்று தொடங்கி வைக்கப்பட்டன. இதுகுறித்து நகராட்சி ஆணையர் பெ.கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, ‘‘மொத்தம் ரூ.48.87 கோடி செலவில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனைத்துப் பணிகளும் நிறைவு செய்யப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்