பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 2-வது நாளாக நேற்றும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் ஒருபகுதியாக, தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி, பிற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வுபெற்ற ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உட்பட 9 தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் 2-வது நாளாக குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டன.தனியார் பேருந்துகள் இருப்பினும் சரிபாதி பேருந்துகள் இயக்கப்படாததால், நெரிசலில் பொதுமக்கள் பயணிப்பதை பார்க்க முடிந்தது.
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, "சுமார் 50 சதவீதம் பேருந்துகள் 2-வது நாளில் இயக்கப்பட்டன. பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வெளியிலிருந்து தற்காலிக அடிப்படையில் ஓட்டுநர்களை வரவழைத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நிலைமை இன்னும் தீவிரமடையும் சூழல் இருந்தால், கூடுதலாக தற்காலிக பணியாளர்களை வரவழைத்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
இதற்கிடையே கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் - காங்கயம் சாலை போக்குவரத்து பணிமனை முன் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
உடுமலை
உடுமலையில் அரசு போக்குவரத்து பணிமனை முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு போக்குவரத்து ஊழியர்கள் கூட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். தாராபுரம் பகுதியிலும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால், குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளே இயங்கின.
உதகை
உதகை மத்தியப் பேருந்து நிலையம் முன்பு எல்பிஎஃப் தொழிற்சங்க மண்டல பொறுப்பாளர் நெடுஞ்செழியன் தலைமையில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தனியார் பேருந்து போக்குவரத்து இல்லாத நிலையில், அரசுப் பேருந்துகள் இயங்காததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
இதேபோல கோவையில் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகம் முன் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago