திருப்பூர் மாநகராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட வீரப்ப செட்டியார் நகரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அலைபேசி கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் அருகே தனியார் பள்ளி, விநாயகர் கோயில் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அச்சம் தெரிவித்தும், அலைபேசி கோபுரம் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தியும் ஆட்சியர் மற்றும் மாநகராட்சி முதலாவது மண்டல அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அலைபேசி கோபுரம் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் செல்வராஜ் தலைமையில், முதலாவது மண்டல அலுவலகத்துக்கு நேற்று 30-க்கும் மேற்பட்டோர் சென்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், அலைபேசி கோபுரம் அமைக்க மாநகராட்சி நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும், பாதுகாப்பு குறித்து மட்டுமே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள், ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் முறையிட முடிவு செய்து கலைந்து சென்றனர்.
பிரச்சினைக்குரிய இடத்துக்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள், பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து தற்காலிகமாக அலைபேசி கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago