தருமபுரி மாவட்டத்தில் இயந்திர அறுவடைக்கு ஏற்ப கரும்பு நட பயிற்சி குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சேதாரமின்றி இயந்திர முறையில் அறுவடை செய்ய ஏற்ற கரும்பு நடவுமுறை குறித்து தருமபுரி மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் பயிற்சி அளிக்க வேண்டுமென குறைதீர் கூட்டத்தில் விவசா யிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. ஆட்சியர் அலுவலக வளாக கூடுதல் கட்டிட கூட்டரங்கில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அரூர் வட்டம் வரட்டாறு(வள்ளிமதுரை), பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வாணியாறு ஆகிய அணைகளில் இருந்து அண்மையில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கரும்பு விவசாயிகளுக்கு முழுமையாக பயன்படும் வகையில் வழங்க வேண்டும். மேலும், கரும்பு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானிய திட்டத்தில் சொட்டுநீர் உபகரணங்கள் வழங்கிட வேண்டும். கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக கரும்பு விவசாய பரப்பு குறைந்து வருகிறது.

இதற்கிடையில் ஆள் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில் கரும்பு வெட்டும் இயந்திரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் ஏற்பாட்டில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதேநேரம், இந்த இயந்திரங்களில் கரும்பு வெட்டும்போது அதிக அளவில் கரும்பு சேதாரம் ஆகிறது. இயந்திரம் மூலம் அறுவடை செய்ய நடவின்போதே சில ஒழுங்குமுறைகளை பின்பற்றுவதன் மூலம் கரும்பு சேதாரத்தை தவிர்க்க முடியும் என்று கூறப்படுகிறது.

இதற்கான பயிற்சிகளை வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி பதிலளித்து பேசும்போது, கோரிக்கைகள் ஆட்சியர் மூலம் அரசு கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.

கூட்டத்தில், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் வசந்தரேகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்