தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகளில் 1817 வாக்குச்சாவடிகள்

By செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் 1817 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன, என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குச் சாவடிகள் அமைப்பது தொடர்பாக நேற்று ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கார்த்திகா தலைமை வகித்தார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:

தருமபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) என மொத்தம் 5 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. கரோனா தொற்று சூழலில் ஒரு வாக்குச் சாவடிக்கு 1000 வாக்காளர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் 1000-க்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட வாக்குச் சாவடிகளை பிரித்து புதிய வாக்குச் சாவடிகள் உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அந்த வரிசையில், மாவட்டத்தின் 5 சட்டப் பேரவை தொகுதிகளிலும் சேர்த்து புதிதாக 417 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், 1050 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடி என்ற முறையில் மாற்றியமைக்க உத்தர விடப்பட்டது. இந்நடவடிக்கையால், கூடுதலாக உருவாக்கப்பட்ட வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 339 ஆக குறைக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது மாவட்டத்தில் மொத்தம் 1,817 வாக்குச் சாவடிகள் உள்ளன.

இந்த வாக்குச் சாவடிகள் அனைத்தும் பள்ளிகள் மற்றும் அரசு கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் அனைத்து அடிப்படை வசதி களும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

தருமபுரி சட்டப் பேரவை தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராக தருமபுரி கோட்டாட்சியர் பிரதாப் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, இதர சட்டப் பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி, அரூர் தொகுதிகளுக்கு கோட்டாட்சியர் அலுவலகங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகங்களாகவும், இதர 3 தொகுதிகளுக்கு அங்குள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலு வலகங்களாகவும் செயல்படும்.

இவ்வாறு பேசினார்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, தருமபுரி கோட்டாட்சியர் பிரதாப், உதவி ஆணையர் (ஆயம்) தணிகாசலம், அரூர் கோட்டாட்சியர் முத்தையன், வட்டாட்சியர்கள் சாந்தி, நாசீர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்