ஆவடி அருகே பட்டாபிராமில் நடந்துவரும் டைடல் பார்க் அமைக்கும் பணிகளை நேற்று தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே பட்டாபிராமில், தமிழக தொழில் துறை சார்பில் ரூ.235 கோடி மதிப்பில், 5 லட்சம் சதுரடி பரப்பளவில் 21 தளங்கள் கொண்ட டைடல் பார்க் அமைக்கும் பணி கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
இப்பணியை நேற்று தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்ததாவது:
தகவல் தொழில்நுட்ப சேவைகள் துறையில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் பட்டாபிராமில் டைடல் பார்க் அமையும். தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த பல நிறுவனங்கள் பட்டாபிராம் டைடல் பார்க்கில் தங்களது நிறுவனங்களின் பணிகளை மேற்கொள்வதற்கு ஆர்வத்துடன் முன்வந்திருக்கின்றன.
ஏழை, எளிய மக்கள் மற்றும் நடுத்தரப் பிரிவு மக்கள் அதிகமாக வசிக்கும் ஆவடி – பட்டாபிராம் பகுதியில் இந்த ஐ.டி. பார்க் அமைக்கப்படுவதால் இப்பகுதியும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்ப்பதுடன், இப்பகுதி மக்களின் வேலைவாய்ப்புக்கும் உதவிகரமாக இருக்கும். இந்த டைடல் பார்க் அமைக்கும் பணியை விரைவாக முடித்து 2022 மார்ச் மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு கொண்டுவர பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago