திண்டிவனம் அருகே தீவனூர் கிராமத்தில் நேற்று ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தேர்தல் பரப்புரை கூட்டம் மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான்தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் சிலர் தங்கள் கோரிக்கைகளை மு.க.ஸ்டாலினிடம் எடுத்துரைத்தனர்.
மயிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “விழுப்புரம்மாவட்டத்தில் காகித தொழிற்சாலை கொண்டு வந்து சவுக்கு விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். தென்புத்தூர் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும்” என்றார். அதற்கு பதலளித்த ஸ்டாலின்,“அடுத்து, நாம் தான் ஆட்சிக்குவரப்போகிறோம் என்ற நம்பிக் கையோடு வந்திருக்கிறீர்கள், திமுக ஆட்சியில் விரைவில் நல்ல முடிவு ஏற்படும்” என்றார்.
திண்டிவனத்தைச் சேர்ந்த ஜெனிதா என்பவர், “குடும்ப வறுமையால் எனது பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லை. எனது மகன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைக்கவில்லை, வருடத்திற்கு ரூ.2 லட்சம் கேட்கிறார்கள், நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும்” என்றார்.
அதற்கு ஸ்டாலின், “நீட் தேர்வை ஒழிப்பதில் எந்த விதத்தில் என்னால் உதவி செய்ய முடியுமோ அதை திமுக ஆட்சி அமைந்ததும் நிச்சயம் செய்வேன்” என்றார்.
மயிலம் சதீஷ் பேசுகையில், “செஞ்சி பகுதியில் அரசு கலைக் கல்லூரி கொண்டு வர வேண்டும்” என்று கூற, அதற்கு பதிலளித்த ஸ்டாலின், “நிச்சயம் இதற்கு தீர்வு கிடைக்கும். திமுக ஆட்சியில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னேற்றம் காணப்படும்” என்றார்.
செஞ்சியைச் சேர்ந்த பாக்கியம் பேசுகையில், “100 நாள் வேலைத் திட்டத்தில் முறையாக 100 நாட்கள் வேலை தருவதில்லை; 30 நாட்கள்தான் வேலை தருகின் றனர்” என்றார்.
அதற்கு ஸ்டாலின், “இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இந்தத் திட்டத்தில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. பல்வேறு முறைகேடுகளும் நடக்கின்றன. கடந்த மக்களவைத் தேர்தலின்போது நான் குறிப்பிட்டு சொன்னேன், மத்திய அரசின் அனுமதி பெற்று 150 நாட்களாக உயர்த்துவது பற்றியும் பேச உள்ளோம். தேர்தல் அறிக்கையில் அதுபற்றி வெளியிடப்படும்” என்றார்.
மயிலத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மணிகண்டன் பேசும்போது, “கடந்த 2013-ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றேன். வேலை கிடைக்கும் என்று நம்பியிருந்த எனக்கு வேலை கிடைக்கவில்லை. எனது தாய், தந்தை இறப்பதற்கு முன்பாவது வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களை பார்த்ததும் எனக்கு வந்துள்ளது” என்றார்.
உடனே ஸ்டாலின், “கருணாநிதி, முதல்வராக இருந்தபோது மாற்றுத் திறனாளிகளுக்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து பல சலுகைகளை வழங்கினாரோ அதை விட அதிகமாகவே உங்கள் குறைகள் தி.மு.க. ஆட்சியில் தீரும்” என்றார்.
திண்டிவனம் ராஜா பேசுகையில், “கடல்நீரை குடிநீராக்கும் திட்டத் தால் 1,000 லிட்டர் தண்ணீர் எடுக்கும் போது 300 லிட்டர் நல்ல தண்ணீர் கிடைக்கும். 700 லிட்டர் ரசாயனம் கலந்த கலவையால் மரக்காணத்தைச் சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் நீர்வளம் பாதிக்கப்படும். எனவே இத்திட்டத்தை கைவிட வேண்டும்” என்றார்.
அதற்கு ஸ்டாலின், “திமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும்,மரக்காணம் பகுதியில் நிலம் கையகப்படுத்தியதில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப் படவில்லை.
மக்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படவில்லை. இதுபற்றி அவர்கள் என்னிடத்தில் புகார் மனுக்களும் அளித்துள்ளனர். அந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago