பாதுகாப்பு இல்லாததால்தான் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து சாத்தூர் அருகே ஆய்வு செய்த மத்திய குழு தகவல்

By செய்திப்பிரிவு

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 23 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் 7 பேர் கொண்ட மத்தியக் குழு ஆய்வு மேற்கொண்டது.

சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் சந்தனமாரி என்பவரது பட்டாசு ஆலையில் கடந்த 12-ம் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 14 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இது குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்து விபத்துக்கான காரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்தது.

இந்நிலையில் பஞ்சாப், ஹரி யாணா, சென்னை உயர் நீதி மன்றங்களில் நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கண்ணன் தலைமையில் நாக்பூர் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி குல்கர்னி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அலுவலர் கருப்பையா, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் வரலட்சுமி, தொழிலக பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்குமார், சென்னை ஐஐடி வேதியியல் பொறியியல் துறை பேராசிரியர் ராஜகோபாலன் னிவாசன், மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு உறுப்பினரும் மாவட்ட வருவாய் அலுவலருமான மங்கள ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட குழுவினர் அச்சங் குளம் பட்டாசு ஆலையில் நேற்று ஆய்வு செய்தனர்.

வெடிவிபத்தில் இடிந்து விழுந்த கட்டிடங்கள், பணியாற்றிய தொழிலாளர்களின் எண்ணிக்கை, ஆலையில் பாதுகாப்பு அம்சங்கள், வெடி மருந்துகளில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு இன்மை, கவனக்குறைவு, போதிய தொழில் பயிற்சி இல்லாதது உட்பட பல்வேறு காரணங்களால் விபத்து ஏற்படுகிறது.

பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வுகளை அதிகரிக்க வேண்டும். அதற்காக கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை முறைப்படுத்த வேண்டும்.

எங்கள் குழு தாக்கல் செய்யும் அறிக்கையில் பட்டாசு விபத்துகளை தடுப்பதற்கான ஆலோசனைகள், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கண்காணிப்பது, விபத்துகளை தடுப்பது, பட்டாசு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பரிந்துரைகள் அனுப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்