பாலாற்றை பாதுகாக்க மார்ச்சில்ஷ விழிப்புணர்வு பாத யாத்திரை அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பாலாற்றை பாதுகாக்க மார்ச் மாதத்தில் விழிப்புணர்வு பாத யாத்திரை நடத்தப்போவதாக அகில பாரதீய சன்னியாசிகள் சங்கத் தலைவர் ராமானந்தா சுவாமிகள் அறிவித்துள்ளார்.

மாசிமகத்தையொட்டி, அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம், தென்பாரத கும்பமேளா அறக்கட்டளை ஆகியவை இணைந்து துறவியர் மாநாட்டை கும்பகோணத்தில் நேற்று நடத்தின. மாநாட்டுக்கு வந்தவர்களை தென் பாரத கும்பமேளா அறக்கட்டளைத் தலைவர் எஸ்.சவுமிநாராயணன் வரவேற்றார். செயலாளர் வி.சத்யநாராயணன், பொருளாளர் வேதம் முரளி, அகில பாரதீய சன்னியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் வேதாந்தானந்தா, பொதுச் செயலாளர் ஆத்மானந்த சரஸ்வதி சுவாமிகள், மன்னார்குடி செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர், சென்னை சாது தாம்பரனந்தா சுவாமிகள், சன்னியாசிகள் சங்கத்தின் கேரள மாநிலத் தலைவர் பிரபாகரனந்த சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

மாநாட்டில் நிறைவேற்ற தீர்மானங்கள் குறித்து, அகில பாரதீய சன்னியாசிகள் சங்கத் தலைவர் ராமானந்தா சுவாமிகள் பேசியதாவது:

இந்து மதத்தை பாதுகாக்க இந்துக்கள் அனைவரும் முன்வர வேண்டும். முஸ்லிம்கள் புனித பயணம் செல்ல 15 ஆயிரம் பேருக்கும், கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்ல 1,000 பேருக்கும் தமிழக அரசு அனுமதியையும், நிதியையும் வழங்குகிறது. ஆனால், பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள் கயிலாய யாத்திரை செல்ல 400 பேருக்கு மட்டுமே, இந்து சமய அறநிலையத் துறையிலிருந்து நிதி வழங்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையை அதிகரித்து, அரசு நிதியிலிருந்து நிதி வழங்க வேண்டும்.

தமிழகத்தில் நீர்நிலைகளைப் பாதுகாக்கவும், கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்கவும் தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும். ஏற்கெனவே, அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில் காவிரி புஷ்கரம், வைகை, தாமிரபரணி, தென்பெண்ணை நதிகளை பாதுகாக்க புஷ்கர விழாக்கள் நடத்தப்பட்டதன் விளைவாக, அந்த ஆறுகளில் நீர் பற்றாக்குறை இல்லாமல் இருந்தது. இதேபோல, சாயக்கழிகளால் பாழ்பட்டு வரும் பாலாற்றை பாதுகாக்கும் விதமாக மார்ச் மாதத்தில் விழிப்புணர்வு பாத யாத்திரை நடத்தி, அங்கு புஷ்கரம் விழா நடத்தப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்