திருவாரூரில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், மேட்டூர் அணை தண்ணீரை சரபங்கா திட்டத்துக்கு பயன்படுத்தக்கூடாது என விவசாயிகள் வலியுறுத்தினர்.
திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு நுகர்பொருள் முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், இணை இயக்குநர் சிவக்குமார் மற்றும் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி ரங்கநாதன், குடவாசல் சேதுராமன் உட்பட பல்வேறு விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசியது:
மேட்டூரிலிருந்து சரபங்கா திட்டத்துக்காக உபரிநீரை எடுத்துச் சென்றால், டெல்டா பகுதியின் விவசாயம் பாலைவனமாக மாறும் சூழல் ஏற்படும். டெல்டா பகுதியிலுள்ள விளைநிலங்கள் செழிப்பாக இருக்க வேண்டுமென்றால், மேட்டூர் நீரை இதர திட்டங்களுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து கொள்முதல் நிலையங்களிலும், நெல் மூட்டைகள் இயக்கமின்றி தேங்கிக் கிடப்பதால், நெல் கொள்முதலில் குளறுபடிகள் ஏற்படுகின்றன. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயிர்க் கடன் தள்ளுபடி என அறிவிக்கப்பட்ட பிறகு மத்திய கால கடன், நீண்ட கால கடன்களுக்கு இது பொருந்தாது எனக் கூறுவது முறையல்ல. அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்வதுடன், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
பொதுப்பணித் துறை தொடர்பான கட்டுமானப் பணிகள், அணை சீரமைப்புப் பணிகளை மார்ச் மாதத்தில் தொடங்கி ஜூன் மாதத்தில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடைகாலத்திலேயே தூர் வாரும் பணிகளை முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.
இதற்கு பதிலளித்து பேசிய ஆட்சியர் வே.சாந்தா, “விவசாயிகளின் கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago