வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் நீண்டகாலமாகப் போராடி வருகிறார். கோரிக்கை நிறைவேற்றப்படாததால் பாமக சார்பில் அண்மையில் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்காக நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். இந்த ஆணையமும் 2 தடவை கூடி ஆலோசனை நடத்தியது. இந்நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவை அறிமுகம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
1985-ம் ஆண்டில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜே.ஏ.அம்பாசங்கர் தலைமையிலான தமிழ்நாடு இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த ஆணையம், தமிழக மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களின் மக்கள் தொகையை மதிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் அப்போதிருந்த அனைத்து அத்தகைய சாதிகள் மற்றும் சமூகங்களின் பின்தங்கிய நிலையைக் கண்டறிவதற்காக மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்களிடம் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.
1993-ம் ஆண்டு தமிழக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (கல்வி நிலையங்களில் இடங்கள் மற்றும் அரசின் கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்களை அல்லது பதவிகளை ஒதுக்கீடு செய்தல்) சட்டத்தின் கீ்ழ் தனியார் கல்வி நிலையங்கள் உள்ளடங்கலான கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையிலும் அரசின் கீழ் வரும் பணிகளில் பதவிகள் அல்லது நியமனங்களிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் முறையே 30 சதவீதம், 20 சதவீதம் ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
மிகவும் பிற்படு்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர், பிற சாதியினர் மற்றும் சமூகத்தினருடன் போட்டியிட்டு, அவர்களின் உரிய மற்றும் அத்தகைய ஒதுக்கீட்டின் பலன்களின் சட்டப்படியான பங்கினைப் பெறஇயலவில்லை என்பதாலும், அத்தகைய கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையில் மற்றும் அரசின் கீழ் வரும் பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகளில் அவர்களுக்கான தனிப்பட்ட ஒதுக்கீடு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த வன்னியகுல சத்ரியர்களுக்கு வழங்குவதற்காக அவர்களிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன.
தமிழகம் பிற்படுத்தப்பட்டோர் நலஆணையத் தலைவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்குள் பல்வேறு பிரிவினர்களுக்காக உள் ஒதுக்கீடு வழங்க பல்வேறு சமூகத்தினரால் வைக்கப்பட்ட கோரிக்கையை ஆய்வு செய்தது. தமிழக மாநிலத்துக்குள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினரின் சமமான வளர்ச்சியை முன்னேற்றுவதற்காகவும் பல்வேறு நலன்களுக்கு சிறந்த வாய்ப்பினை வழங்குவதற்காகவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வன்னியர்களுக்கு 10.5 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் 7 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 2.5 சதவீதம் ஆகிய 3 பிரிவுகளுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இந்த ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளவும் அதற்கிணங்க இடஒதுக்கீடு கொள்கையை நிறைவேற்றவும் அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் பேரவையில் நேற்று சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, ஆய்வு செய்து குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக இந்த சட்ட மசோதா குறித்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது: 2012-ம் ஆண்டு ஜனார்த்தனம் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையிலேயே இந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அத்துடன் இந்த ஒதுக்கீடானது தற்காலிகமாக வழங்கப்படுகிறது. இன்னும் 6 மாத காலத்தில் சாதிவாரியாக கணக்கெடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான ஆணையம் அமைக்கப்பட்டு அப்பணி தொடங்கப்பட்டுள்ளது.
அது ஒவ்வொரு சாதிக்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் என்ற அடிப்படையில் வரும்போது அது மாற்றியமைக்கப்படும். இடஒதுக்கீட்டுக்காக வன்னியர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ராமதாஸும் மற்றும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்து தங்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இன்று சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago