அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வேளாண் துறை அலுவலர்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகளின் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா தலைமையில் நடைபெற்றது. அரசு அமைத்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்த விவசாயிகளிடம், கொள்முதல் செய்யாமல் அரசு அலுவலர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு வியாபாரிகளிடம் கொள்முதல் செய்கின்றனர்.
40 கிலோ மூட்டைக்கு 55 ரூபாய் வரை கமிஷன் கொடுப்பவர்களுக்கு மட்டுமே கொள்முதல் நிலையத்தில் முன்னுரிமை வழங்கப்படுகின்றது.
இவை அனைத்தும் நுகர் பொருள் வாணிப கழகத்தின் மண்டல மேலாளரின் ஆதரவோடு நடைபெறுவதாக குற்றம் சாட்டினர்.
மேலும் வியாபாரிகளிடம் மூட்டைக்கு 100 ரூபாய் வரை கமிஷன் பெற்றுக்கொண்டு நெல்லை வாங்கி வருகின்றனர். இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு கொடுத்தவர்களுக்கு நிலுவைப் பணம் வழங்கப்படாமல் உள்ளது. பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஜி.மோகனன் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய விவசாயிகள், காட்டுப்பன்றியின் தொல்லை அதிகமாக இருப்பதால் அதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும், நெல்லுக்கு கட்டுப்படியான விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், மாவட்டத்தில் உள்ள இருளர் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், பாசன கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்று கூறினர். அரசு வழங்கும் நிவாரணம் அனைத்தும் விவசாயிகளுக்கு முறையாக கிடைப்பதில்லை எனவும் குற்றம் சாட்டினர்.
இதைத் தொடர்ந்து பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, “விவசாயிகள் கூறிய புகார்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago